கோப்பை வென்றது நியூசிலாந்து: பாகிஸ்தான் அணி ஏமாற்றம்

வெலிங்டன்: ஐந்தாவது 'டி-20' போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடரை 4-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 3-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது போட்டி வெலிங்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் (11), ஹசன் நவாஸ் (0), உமைர் யூசுப் (7), உஸ்மான் கான் (7), அப்துல் சமத் (4) ஏமாற்றினர். கேப்டன் சல்மான் ஆகா (51), ஷதாப் கான் (28) கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட் சாய்த்தார்.
செய்பர்ட் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட், ஆலன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஜஹாந்தத் கான் வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த செய்பர்ட், 22 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது ஆலன் (27) அவுட்டானார். மார்க் சாப்மன் (3) நிலைக்கவில்லை. ஷதாப் கான் வீசிய 10வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய செய்பர்ட் வெற்றியை உறுதி செய்தார்.
நியூசிலாந்து அணி 10 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது. செய்பர்ட் (97* ரன், 38 பந்து, 10 சிக்சர், 6 பவுண்டரி, 'ஸ்டிரைக் ரேட்' 255.26), டேரில் மிட்செல் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.