தொழில்நுட்ப கோளாறால் யுபிஐ சேவை பாதிப்பு

புதுடில்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, யுபிஐ சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், இன்று மாலை 7 மணி முதல் யுபிஐ(டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம்) சேவையை இந்த செயலிகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பயனர்கள், தங்களது பிரச்னையை 'எக்ஸ் ' சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். சிலர் மீம்ஸ்களை வெளியிட்டனர்.


இதனையடுத்து யுபிஐ சேவையை வடிவமைத்த நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(என்பிசிஐ) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொழில்நுட்ப பிரச்னை காரணமாக யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப் பிரச்னை தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. இடையூறுக்கு வருந்துகிறோம் எனக்கூறியுள்ளது.

Advertisement