போதை டிரைவரால் விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

பல்லடம்; காரணம்பேட்டையில், மதுபோதையில் லாரி ஓட்டிய டிரைவரால், கட் டுப்பாட்டை இழந்த லாரி மோதி, ஒருவர் பலி. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த சபரி, 32, ராதாகிருஷ்ணன் மனைவி காளீஸ்வரி 37 ஆகியோர் ஒரு டூவீலரிலும், சூலுாரை சேர்ந்த செந்தில்குமார், 42 மற்றொரு டூவீலரிலும், வடமாநில தொழிலாளி ஒருவர் இன்னொரு டூவீலரிலும் கோவையில் இருந்து - பல்லடம் நோக்கி வந்தனர். காரணம்பேட்டை நால்ரோடு சிக்னலில், சிக்னலுக்காக டூவீலரில் காத்திருந்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர், இளங்கோவன் 45; லாரி டிரைவர். மணல் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி புறப்பட்டார்.

காரணம்பேட்டை சிக்னலில் அடுத்தடுத்து நின்றிருந்த, இவர் ஓட்டிவந்த லாரி, 4 டூவீலர்கள் மீது மோதியது. இதில், நான்கு பேரும் டூவீலருடன் துாக்கி எறியப்பட்டனர்.

இதில், படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சபரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும், படுகாயங்களுடன், பல்லடம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர், குடிபோதையில் இருந்துள்ளார். பொதுமக்களுக்கு பயந்து, லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, போதையில் இருந்த டிரைவரை கண்டுபிடித்து கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

காரணம்பேட்டையில் தொடரும் விபத்து

பல்லடம் - காரணம்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டது. போக்குவரத்து நிறைந்த காரணம்பேட்டை நால்ரோடு சிக்னலில், ரவுண்டானா அமைத்தால்தான் போக்குவரத்து சீராக இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. காரணம்பேட்டையில், சிக்னலும் சரிவர இயங்காத நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் இருப்பதில்லை. இதன் காரணமாக, நால்ரோடு சிக்னல் பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் இதே பகுதியில், இரண்டு விபத்துகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement