சேகர்பாபுவை துாக்கத்தில் இருந்து எழுப்புங்கள்: தமிழிசை காட்டம்

ராமாபுரம் : சென்னையில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: பிரபல யு-டியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில், அவரது தாய் இருக்கும் போது தாக்குதல் நடத்தியது மிகவும் தவறு.


சவுக்கு சங்கர் துப்புரவு பணியாளர்களை தவறாக பேசியிருந்தால், அதற்கு கண்டனம் தெரிவிக்கலாம். உண்மையில் துப்புரவு பணியாளர்களையும் பெண்களையும் தவறாக பேசியிருந்தால் அது தவறுதான்.


இருப்பினும் வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. சவுக்கு சங்கர் வீட்டில் இல்லாத நேரம், அவரது வீட்டில் சாக்கடை மலம் உள்ளிட்டவற்றை கொட்டி, அவரது அம்மாவை பரிதவிக்க விட்டது மிகவும் தவறு.


'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை' என நம்ப மறுக்கும் அமைச்சர் சேகர்பாபு, துாக்கத்தில் இருக்கிறார். யாராவது அவரை துாக்கத்தில் இருந்து எழுப்பி விட வேண்டும். நான் புதுச்சேரியில் முக்கியமான பொறுப்பை விட்டுவிட்டு, தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன்.


ஆனால், என்னை புதுச்சேரியில் இருக்கிறேனா என கேட்கும் சேகர்பாபுவிற்கு, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியாதா? நான் என்னை வளர்த்த கட்சியை விட்டுவிட்டு, வேறு கட்சிக்குச் சென்று, 'அம்மா வளர்த்தார்' என்பதற்கு பதில் 'அண்ணா வளர்த்தார்' என்று சொல்ல மாட்டேன்.


சென்னையில் ஒரு நாளைக்கு இரண்டு கொலை நடக்கிறது நெல்லையில் 46 கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனாலும், சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று சொல்ல, முதல்வருக்கும் அமைச்சர்களுக்கு எப்படி மனம் வருகிறது? இவ்வாறு தமிழிசை கூறினார்.

Advertisement