பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் திறக்கிறார் பிரதமர் மோடி!

7


ராமநாதபுரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் பிரதமர் வருகையை ஒட்டி திறப்பு விழாவிற்கான ஏற்பாடு குறித்து ஒத்திகை நடத்துவதற்காக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் வந்தார்.

சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்த அவர், ரயில் நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வரும் ஏப்ரல் 6ம் தேதி ராம நமமி அன்று பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்.



அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிரதமர், ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் தூக்கு பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பாலத்தை அகற்றுவதில் சிரமம் இருக்கிறது.


அதனை அகற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான ரயில் சேவை பணிகள் குறித்து நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாநில அரசுடன் பேசி விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement