பாசி படர்ந்த குடிநீர் தொட்டி நல்லுாரில் நோய் பரவும் அபாயம்

வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் ஊராட்சி, நல்லுாரில், வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில், அப்பகுதியினர் கூடுதல் குடிநீர் தேவைக்காக சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இப்பகுதி மக்களும், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், தொட்டியின் மையப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. உடைந்த தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், தொட்டியில் சேமித்து வைக்கப்படும் சிறிதளவு குடிநீரும் பாசி படர்ந்த நிலையில் உள்ளது. மாசடைந்த நிலையில் குடிநீரை குடிப்போருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நல்லுாரில், உடைந்த நிலையில் உள்ள பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி அமைத்து, நல்ல தண்ணீரை வழங்க வையாவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''வையாவூர் ஊராட்சி, நல்லுார் கிராமத்தில், பாசி படர்ந்து, உடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement