'மாநில நிதியில் 100 நாள் வேலை'
சென்னை:''நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில், 100 நாள் வேலை உறுதி திட்டம், மாநில நிதியில் மேற்கொள்ளப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் விவாதம்:
அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா: 'ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அவ்வாறு இணைக்கப்படும் பகுதிகளில், ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசு நிதி வழங்காது. எனவே, அதற்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும். துாய்மை பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் நேரு: தமிழகத்தில், 40,000க்கு மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக, வாக்குறுதி அளிக்கவில்லை. அவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என, வாக்குறுதி அளித்து உள்ளோம்.
நகர்ப்புறங்களில், 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், மத்திய அரசு நிதி தராது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் செய்யப்படும் பணிகளுக்கு, மாநில அரசு நிதி வழங்கும்.
ராஜன் செல்லப்பா: வடசென்னை சமச்சீர் திட்டத்திற்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எவ்வாறு நிதி செலவிடுகிறது.
அமைச்சர் சேகர்பாபு: இத்திட்டத்தை சி.எம்.டி.ஏ., மட்டும் செய்யவில்லை. மாநகராட்சியும் செய்கிறது. மாநகராட்சி 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
ராஜன் செல்லப்பா: மதுரை பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம், எப்போது பயன்பாட்டுக்கு வரும்.
அமைச்சர் தியாகராஜன்: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், எந்தெந்த பணிகள் செய்யக்கூடாதோ, அவை செய்யப்பட்டுள்ளன.
வணிக வளாகம் கட்டப்பட்ட பகுதிக்கு, 3 அடி நீள பாதை தான் உள்ளது. இதனால், கடைகளை வாடகைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போது 'பேக்கேஜ்' முறையில், டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜன் செல்லப்பா: சொத்துவரி முதல் குப்பை வரி வரை உயர்த்தப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு, கடப்பாரை எடுத்துச் செல்கின்றனர். வீட்டின் முன் குப்பையை கொட்டுகின்றனர்.
அமைச்சர் நேரு: மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் வரி விதிப்பு குறைவாகவே உள்ளது. காரைக்குடியில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவ்வாறு நடந்து கொண்ட இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!
-
பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் திறக்கிறார் பிரதமர் மோடி!