மீஞ்சூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை கால்வாய், நீர்நிலைகளில் தேங்குவதால் சுகாதாரம் கேள்விக்குறி

மீஞ்சூர்:திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி 18 வார்டுகளுடன், 8.29 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. இதில், 7,554 குடியிருப்புகளில், 35,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட, 153 தெருக்களில் மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இவற்றில், குடியிருப்புகளின் கழிவுநீரும் வெளியேற்றப்படுகிறது.

கால்வாய்களில் வந்தடையும் கழிவுநீர், மொத்தமாக மீஞ்சூர்- - நந்தியம்பாக்கம் பகுதிகளுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் மற்றும் காலி இடங்களில் தேங்குகிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து, தெருச்சாலைகளில் வெளியேறி குடியிருப்புவாசிகளுக்கு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கால்வாய்கள் திறந்தநிலையில் இருப்பதால், அவற்றில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லைகள் அதிகரித்துள்ளது. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து வருகிறது. நீர்நிலைகளில் உள்ள நீருடன் கழிவுநீர் கலக்கும்போது, அதிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து பகுதியாக மீஞ்சூர் உள்ளது. மீஞ்சூரை சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து துணை நகரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

அதிகரித்தது வரும் குடியிருப்புகள், மக்கள் தொகை ஆகியவற்றிற்கு ஏற்ப மீஞ்சூரில் கழிவுநீர் முறையாக கையாளப்படாமல், கால்வாய்களில் தேங்கி வருவதுடன், குடியிருப்புகளை சூழ்ந்து வருவது, சமூக ஆர்வலர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் -- வண்டலுார் வெளிவட்ட சாலை, காட்டுப்பள்ளி -- மாமல்லபுரம் இடையே, சென்னை எல்லை சாலை திட்டம், எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கான வாய்ப்பு ஆகியவற்றால், மீஞ்சூரில் புதிய குடியிருப்பு மனைகள் உருவாகி வருகின்றன.

ஐந்து ஆண்டுகளில், தற்போது உள்ளதை விட இரண்டு மடங்கு கூடுதலான குடியிருப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையை தொடர்ந்தால், மக்களின் சுகாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும்.

மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் அருகில் உள்ள பட்டமந்திரி, மேலுார், வல்லுார் ஆகிய பகுதிகளை இணைத்து, பெரிய அளவிலான கழிவுநீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மீஞ்சூர் பேரூராட்சியில் கழிவுநீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த போதுமான இடவசதி இல்லை. குறைந்பட்சம், 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கழிவுநீர் மேலாண்மைக்கான திட்ட முன்மொழிவை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பதற்கான திட்டமிடலும் உள்ளது. அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

பேரூராட்சி அதிகாரி,

மீஞ்சூர்.

Advertisement