புதிதாக வீடு கட்டும் முன் கரையான் மருந்து கண்டிப்பாக தெளிக்க வேண்டுமா என்ன?

புதிதாக வீடு கட்டும்போது கரையான் மருந்து தெளிக்க வேண்டும் என்கிறார்களே; அது கண்டிப்பாக தெளிக்க வேண்டுமா?
-ஜீவானந்தம், துடியலுார்.
புதிதாக வீடு கட்டும் பொழுது, கரையான் மருந்து தெளிப்பது ஒரு முதலீடு ஆகும். இது உங்கள் வீட்டை நீண்ட காலம் பாதுகாக்கும். வீட்டின் அடித்தளம் முழுவதும் கரையான் மருந்து தெளிக்க வேண்டும். மரப் பொருட்களான கதவுகள், ஜன்னல்கள், மரச்சட்டங்கள் போன்றவற்றில் கரையான் மருந்து அடிக்க வேண்டும். சுவர்களின் அடிப்பகுதி மற்றும் மூலைகளில், கரையான் மருந்து தெளிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி உள்ள மண்ணிலும், கரையான் மருந்து தெளிக்கலாம்.
வீட்டு மொட்டை மாடியில், மழை நீர் வடிவதற்காக தளம் போடும் பொழுது சுருக்கி தளம் போடுவது சிறந்ததா அல்லது சிப்ஸ் கான்கிரீட் என்று சொல்லக்கூடிய, கான்கிரீட் தளம் சிறந்ததா?
-அருண்குமார், பல்லடம்.
வீட்டின் மொட்டை மாடியில் சுருக்கி கொண்டு, தளம் அமைப்பது என்பது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவை கொண்டு அமைப்பதாகும். அவ்வாறு அமைக்கும்போது, வெப்பம் காரணமாக மேலே இருக்கும் சிமென்ட் தளத்தில், விரிசல்கள் வர நிறைய வாய்ப்புள்ளது. அந்த விரிசல்களின் மூலம் நீர்க்கசிவு ஏற்பட்டு கீழே உள்ள கான்கிரீட் தளத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, சிப்ஸ் கான்கிரீட் மூலம் சிறந்த முறையில் வாட்டர் புரூப்பிங் செய்து, அதன் மேல் தளம் அமைப்பது சிறந்த தேர்வாகும்.
வீடு கட்டிய உடனே, உட்புற சுவர்களில் பட்டி வைக்கலாமா அல்லது ஒரு வருடம் கழித்து பட்டி வைக்கலாமா?
-சிவக்குமார், ஒண்டிப்புதுார்.
வீடு கட்டிய உடனே உட்புற சுவர்களில், பட்டி வைப்பது நல்லதல்ல. புதிய சுவர்கள் முழுமையாக உலர வேண்டும். ஒரு வருடம் கழித்து பட்டி வைப்பது நல்லது. வெளிப்புற சுவர்களில் பட்டி வைப்பது பற்றி பட்டியின் வகை, சுவரின் தரம், காலநிலை போன்றவற்றை பொறுத்து முடிவு செய்ய வேண்டும். சரியான நல்ல நிறுவன பட்டியாக இருந்தால் வெயில், மழை ஆகியவற்றில் அதிக பாதிப்பு ஏற்படாது.
எலக்ட்ரிக் பைப் லைன் வரும் இடத்தில் வெடிப்புகள் வருவதற்கு காரணம் என்ன? பாதிப்புகளை தவிர்க்கும் வழிமுறைகளை கூறவும்.
-குமார், வடவள்ளி.
எலக்ட்ரிக் பைப் லைனுக்கு காடி எடுக்கும்போது முடிந்தவரை கிடைமட்டமாக எடுக்காமல், செங்குத்தாகவோ அல்லது சரிவாகவோ எடுக்க வேண்டும். அதை சிமென்ட் கலவை கொண்டு சரியான முறையில் 'பேக்கிங்' செய்ய வேண்டும்.
பிறகு , எலக்ட்ரிக் பைப் காடி எடுத்த இடம் மற்றும் சுவர் மற்றும் பில்லர், பீம் இணையும் இடத்திலும், 4 இன்ச் அகலம் உள்ள பைபர் மெஸ்ஸை சிமென்ட் கலவை கொண்டு பொருத்திய பிறகு, முழு சுவற்றையும் பூச வேண்டும். அதற்கு குறைந்தது ஏழு நாட்கள் தவறாமல் நீர் பாய்ச்ச வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றினால், சுவற்றில் எந்த இடத்திலும் வெடிப்புகள் வராமல் தவிர்க்கலாம்.
செப்டிக் டேங்க் கட்டுவதற்கு, எங்கள் சைட்டில் இடம் குறைவாக உள்ளது; அதற்கு என்ன செய்யலாம்?
-ராஜேந்திரன், காந்திபுரம்.
செப்டிக் டேங்க் கட்டுவதற்கு இடம் குறைவாக இருக்கும் பட்சத்தில், தாங்கள் 'பயோ செப்டிக் டேங்க்' அமைத்துக் கொள்ளலாம். இதற்கு குறைவான இடம் இருந்தாலே போதுமானது. இந்த பயோ செப்டிக் டேங்கிலிருந்து, சுத்திகரிக்கப்பட்டு வெளியேறும் கழிவு நீரை தாவரங்களுக்கு உபயோகித்துக் கொள்ளலாம். இது நமது சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் தடுக்கிறது.
-மணிகண்டன்,
பொருளாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா)
மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது