கல்வி நிதி தருவதில் பாரபட்சம் கூடாது: மத்திய அரசுக்கு அ.தி.மு.க., அறிவுரை

8

சென்னை : மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தர முடியும் என, மத்திய அரசு வலியுறுத்துவது குறித்து, சட்டசபையில் நேற்று, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசியதாவது:



தமிழ்மொழியை பாதுகாப்பதற்காக, மொழி கொள்கை குறித்து, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உளளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த பழனிசாமி, இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.


தமிழ் மொழிக்காக அ.தி.மு.க., ஆற்றியுள்ள தொண்டுகள் அளப்பறியது. தமிழ் மொழிக்காக ஒரு பல்கலையையே அ.தி.மு.க., அரசு உருவாக்கியது. மொழிக்கு ஆபத்து என்றால் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரத்திற்கும் சேர்த்துதான் ஆபத்து வரும்.


இதை நன்கு அறிந்தவர்கள் தமிழர்கள். தமிழர்கள், மற்ற மொழிக்கு நிச்சயமாக எதிரி இல்லை. எங்கள் மீது மற்ற மொழியை திணிக்கக் கூடாது என்று சொல்பவர்கள்.


உலகத்தில் தமிழர்கள் தகவல் தொழிற்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுகின்றனர். தமிழர்கள் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை.


இருமொழி கொள்கையில் உறுதியாக இருந்ததன் அடிப்படையில், இது சாத்தியமாகியுள்ளது. கல்விக்கு நிதி வழங்குவதில், மத்திய அரசு கொடுத்த வழிகாட்டுதல்களை, தமிழக அரசு ஏற்றுள்ளதா, ஏற்கவில்லையா? இதுகுறித்து லோக்சபாவில், மத்திய கல்வி துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுகிறது.


கல்விக்கு நிதி தருவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. கல்விக்கு தேவையான நிதியை, மாநில அரசு வலியுறுத்தி பெற வேண்டும். அதை மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உதயகுமார் பேசினார்.


மேலும், தி.மு.க., - எழிலன், காங்., - செல்வப்பெருந்தகை, பா.ம.க., - ஜி.கே.மணி, இந்திய கம்யூ., - ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ., - நாகை மாலி, ம.தி.மு.க., - சின்னப்பா, ம.ம.க., - அப்துல்சமது, கொ.ம.தே.க., - ஈஸ்வரன், த.வா.க., - வேல்முருகன், வி.சி., - முகமது ஷா நவாஸ் ஆகியோரும் பேசினர்.

Advertisement