ராணுவ வலிமையை அதிகரிக்கும் பி.இ.எம்.எல்., கனரக லாரி

பெங்களூரு:ராணுவ திறனை பலப்படுத்த 12 - வீல் டிரைவ் கொண்ட, கனரக லாரியை அறிமுகப்படுத்தி உள்ளது, மத்திய பொது நிறுவனமான பி.இ.எம்.எல்., என்ற பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம். இந்த வாகனம், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.டி.ஒ.,வின் வாகன ஆராய்ச்சி மற்றும் சோதனை பிரிவின் இயக்குநர் ராமமோகன் ராவ் மற்றும் இதர அதிகாரிகள் முன்னிலையில், பி.இ.எம்.எல்., நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஷாந்தனு ராய் இந்த வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு கீழ் உள்ள, வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், இந்திய ராணுவத்திற்கு தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகள், பீரங்கி, கவச வாகனங்கள், இதர அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உதவுகிறது.

உயரமான மலைப்பகுதிகள், தீவிரமான வானிலைகளில் எளிதாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது.

Advertisement