'மாவட்ட தொழில் மையங்களில் சிபில் ஸ்கோர் அறிய வழியில்லை'

விருதுநகர்:தமிழகத்திலுள்ள மாவட்ட தொழில் மையங்களில், விண்ணப்பதாரரின் கடன் பெறும் தகுதிக்கான 'சிபில் ஸ்கோர்' பார்க்கும் வசதி இல்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து துறையினர் கூறியதாவது:

மாவட்ட தொழில் மையங்களில், சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்ளும் வசதி இல்லை. இதனால், பல விண்ணப்பங்கள் முதலில் ஏற்கப்பட்டு, பின் வங்கிகளில் சிபில் ஸ்கோர் சரிபார்க்கும் போது அவை நிராகரிக்கப்படுகின்றன.

துவக்கத்திலேயே சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்ளும் வசதி செய்திருந்தால், விண்ணப்பங்களை ஏற்காமல் நிராகரித்திருக்கலாம்.

ஆனால் அப்படி செய்யாததால், கடனுக்காக விண்ணப்பித்தவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து ஏமாற்றமடைகின்றனர்.

சிலர் ஆர்வக் கோளாறில் மிகப் பெரிய தொழிலை செய்ய இருப்பதாகக் கூறி கடன் கேட்டு, அதிகாரிகளை திக்குமுக்காடச் செய்கின்றனர்.

அவர்களையும் ஏற்று, பின் நிராகரிக்கும் சூழல் உள்ளது. எனவே, அரசு 38 மாவட்ட தொழில் மையங்களிலும், சிபில் ஸ்கோர் அறியும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் உண்மையிலேயே தகுதியானவரா என்பதை கூர்ந்தாய்வு செய்யும் கட்டமைப்பை, தொழில் மையங்களில் வலுப்படுத்த வேண்டும்.

சமீபத்தில் தகவலறியும் சட்டத்தின் கீழ், மதுரை ஆர்வலர் ஒருவர் பெற்ற தகவலில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 2023 - 24ம் நிதியாண்டில் விண்ணப்பித்த 17,629 பேரில், 2,295 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கூறினர்.

Advertisement