நீதிபதி வர்மாவை இங்கு அனுப்பாதீர்கள்: அலகாபாத் ஐகோர்ட் வக்கீல் சங்கம் போராட்டம்

பிரயாக்ராஜ் : 'டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பாதீர்கள்' என, வலியுறுத்தி அங்குள்ள வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. டில்லியின் துக்ளக் சாலையில், இவர் வசிக்கும் அரசு பங்களாவில், சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது, வீட்டின் ஓர் அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது.
உத்தரவு
நாடு முழுதும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
வெளிப்படை தன்மை
இது குறித்து, அந்த சங்கத்தின் தலைவர் அனில் திவாரி கூறியதாவது: இந்த போராட்டம் எந்த நீதிமன்றத்திற்கும் அல்லது நீதிபதிக்கும் எதிரானது அல்ல. ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும், வெளிப்படைத்தன்மை இல்லாத ஒரு அமைப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்துகிறோம்.
துவக்கத்தில் இருந்தே இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயற்சி நடக்கிறது. இதை எளிதில் அப்படியே விட்டு விட முடியாது. தீர்வு காணப்படும் வரை, விளைவுகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் மீண்டும் பணியை துவங்க மாட்டோம். தற்போதைக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
அசோக் லேலாண்டுக்கு ரூ.700 கோடிக்கு ஆர்டர்
-
கார் விலையை உயர்த்தக்கூடாது நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
'அக்பரை மதமாற்றம் செய்ய முயற்சித்த பாதிரியார்கள்'
-
என்.எஸ்.இ., எடுத்த முடிவால் பி.எஸ்.இ., பங்குகள் உயர்வு
-
'முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்' தொழில்துறையினரிடம் முதல்வர் வேண்டுகோள்
-
பங்கு சந்தை நிலவரம்