'முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்' தொழில்துறையினரிடம் முதல்வர் வேண்டுகோள்

சென்னை:சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தின் ஆண்டு மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது.

இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவின் வளர்ச்சி யில், தமிழகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.

இந்தியாவின் உற்பத்தி துறை மதிப்பு கூட்டலில், தமிழகம் 12.10 சதவீதம் பங்காற்றுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், எட்டு சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில், ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளோம். நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன.

நாட்டின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில், 37.10 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உலக முன்னணி நிறுவனங்களான பாக்ஸ்கான், வின்பாஸ்ட், செம் கார்ப் போன்ற நிறுவனங்கள், தங்களின் உற்பத்தி திட்டங்களை தமிழகத்தில் துவங்க முன் வந்திருக்கிறது. 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூலுார், பல்லடத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா, சென்னைக்கு அருகில் உலகளாவிய நகரம் என, பல அறிவிப்புகள் நடப்பாண்டு தமிழக பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையை உலக தரத்திலான நகரமாக உருவாக்க மூன்றாவது 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரை, ஓசூர், சேலம் உள்ளிட்ட 136 நகரங்களுக்கு மாஸ்டர் பிளான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதன் வாயிலாக நகர விரிவாக்கங்கள் நடக்கும் போது மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.

பசுமை இயக்கத்திற்கு முன்னோடியாக தமிழகம் செயல்படுகிறது. பல முன்னணி நிறுவனங்கள், அவர்களின் திட்டங்களை நம்முடைய மாநிலத்தில் நிறுவியிருக்கின்றனர். தமிழக காலநிலை மாற்ற இயக்கம் வாயிலாக காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

தமிழகத்தின் மின்சார போக்குவரத்து, நிலையான கட்டுமானம் மற்றும் துாய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமை பொருளாதாரத் துறைகளில் நீங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடாது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

தமிழகம் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. தொழில்துறையில் உங்களோடு தொடர்பில் இருக்கும் முதலீட்டாளர்களை நீங்கள் முதலீடு செய்ய இங்கு அழைத்துக்கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement