'அக்பரை மதமாற்றம் செய்ய முயற்சித்த பாதிரியார்கள்'

6


''வெளிநாட்டினர் ஓவியத்தால்தான், இபாதத் கானா அகழாய்வு சாத்தியமானது,'' என, மத்திய தொல்லியல் துறையின் வடமண்டல முன்னாள் இயக்குநர் கே.கே.முகமது பேசினார்.

அவர் பேசியதாவது:



முகலாய மன்னர்களில், மத நல்லிணக்கத்தை விரும்பியவராக அக்பர் திகழ்ந்தார்.

அவர், அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் மத நம்பிக்கைகள் குறித்து கலந்துரையாடும் வகையில், ஒரு அரங்கத்தை கட்டினார்; அதற்கு, 'இபாதத் கானா' என்று பெயர்.


அந்த மண்டபம் காணாமல் போன நிலையில், அவர் காலத்தில் வரையப்பட்டு, பல நாடுகளுக்கு கடத்தப்பட்ட ஓவியங்களின் துணையுடன், அது பதேபூர் சிக்ரியில், மரங்களுக்கு இடையில் உள்ள தொல்லியல் மேட்டில் இருக்கலாம் என யூகித்தேன்.


அதற்கு மிகவும் உதவியாக இருந்தது, அவரை மதம் மாற்றுவதற்காக சந்தித்த ஸ்பானிய கிறிஸ்துவ பாதிரியார்களான ருடால்ப் அக்வாவிவா, அன்டோனியா மான்செரெட் ஆகியோர், வரைந்திருந்த ஓவியங்கள்.


அவர்கள் வந்து செல்லும்போது வழிபடுவதற்காக, அந்த அரங்கத்துக்கு அருகிலேயே சர்ச்சையும் கட்டித் தந்தார். அந்த ஓவியத்தின் துணையுடன், அகழாய்வு செய்தேன்.


அங்கு, ஓவியங்களில் உள்ளது போலவே மூன்று தளங்களும், ஒரு மாடி அமைப்பும் வெளிப்பட்டன. மேலும், வாசனை திரவியங்கள் காய்ச்சுவதற்கான காளவாய் போன்ற அமைப்பும் வெளிப்பட்டது. அந்த பாதிரியார்களால், அக்பரை மதம் மாற்ற முடியவில்லை. அவர்கள், தங்களின் முயற்சியை கோவாவுக்கு சென்று சாதித்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில், 'கிழக்கு கடற்கரையோர அகழாய்வுகள்' என்ற தலைப்பில், தமிழ் பல்கலை முன்னாள் பேராசிரியர் ராஜவேலு பேசினார். மேலும் பல்வேறு தலைப்புகளில் ஆய்வாளர்கள் பேசினர்.


நிகழ்ச்சியில், சி.பி.ராமசாமி அய்யர் இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் நந்திதா கிருஷ்ணா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement