'ஹனி டிராப்'புக்கு வந்த பெண் பரமேஸ்வரிடம் ராஜண்ணா புகார்

பெங்களூரு : தன்னை ஹனிடிராப் செய்ய முயன்றது குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா புகார் அளித்துள்ளார்.
கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா. இவர், 20ம் தேதி சட்டசபையில் பேசும்போது, 'என்னை ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்தது.
இதுபற்றி உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் புகார் அளித்து, உயர்மட்ட விசாரணை நடத்தும்படி கோரிக்கை வைப்பேன்' என கூறி இருந்தார்.
இந்த விவகாரத்தை வைத்து, அரசுக்கு எதிராக பா.ஜ., போராட்டம் நடத்துகிறது.
சட்டசபையில் பேசிய அன்றே ராஜண்ணா, பரமேஸ்வரை சந்தித்து புகார் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் புகார் செய்யவில்லை.
கோலார், துமகூரு மாவட்டங்களில் நடந்த, அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
இதனால் ராஜண்ணா கூறியது பொய்யாக இருக்கலாம் என்றும் பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் பரமேஸ்வரை, ராஜண்ணா சந்தித்தார்.
ஹனிடிராப் முயற்சி குறித்து, புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரில் எந்த ஆவணங்களையும் இணைக்கவில்லை.
முன்னதாக நேற்று காலை பெங்களூரில் ராஜண்ணா அளித்த பேட்டி:
பெங்களூரில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லை. அந்த வீட்டில் இருந்தபோது தான் என்னை ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்தது. என்னை பிரச்னையில் சிக்க வைக்க நினைத்தவர்கள், என் வீட்டிற்கு இரண்டு முறை வந்தனர்.
ஒரு பெண் நீல நிற ஜீன்ஸ் பேன்ட், டாப் அணிந்திருந்தார். என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று சொன்னார். அவர் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தனியாக செல்லவில்லை.
அந்த கும்பலை, என்னிடம் அடையாளம் காட்டினால் கண்டுபிடித்து விடுவேன். நீதிபதிகள் வீடியோ அடங்கிய பென்டிரைவ் இருப்பதாக நான் கூறவில்லை. அரசியல்வாதிகள் பென்டிரைவ் உள்ளது என்று மட்டும் தான் கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதாரங்கள் இல்லாமல் ராஜண்ணா புகார் அளித்து இருப்பதால், போலீசார் எப்படி விசாரிக்க போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.