வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக சட்டசபையில் நாளை தீர்மானம்

2

சென்னை: மத்திய அரசு கொண்டு வர உள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக சட்டசபையில் நாளை( மார்ச் 27) தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த தீர்மானத்தை நாளை முன்மொழிய உள்ளார்.


நாடு முழுதும் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக, வக்பு வாரிய திருத்த மசோதா கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது, ஒருதலைபட்சமானது என்றும், முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த மசோதா பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி., ஜகதாம்பிகா பால் தலைமையிலான பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 23 திருத்தங்களுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது.


இந்த அறிக்கை, கடந்த 13ம் தேதி பார்லிமென்ட் கூட்டத்தில் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை குறித்து விவாதித்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 14 திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில், வக்பு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நாளை தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிய உள்ளார்.

Advertisement