வி.கே.பாண்டியன் மனைவி ஐ.ஏ.எஸ்., பணிக்கு விருப்ப ஓய்வு

1

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பிஜு ஜனதா தளம் தலைவர் வி.கே. பாண்டியனின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ் ., அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வி.கே.பாண்டியன் தமிழகத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவர், 2023ல் விருப்ப ஓய்வுக்கு பின்னர் பி.ஜே.டி.,யில் சேர்ந்தார். ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்பட்டார்.

மாநில அரசியலில் முக்கிய தலைவராக உருவெடுத்தார். நவீன் பட்நாயக்கிற்கு பதிலாக மாநில முழுவதும் ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

இவர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்றும் தகவல்கள் வெளியாகின. அரசு சார்பில் அனைத்து முடிவுகளையும் பாண்டியன் எடுப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

தேர்தல் பிரசாரத்தின் போது பாஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பாண்டியன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

இதன் தொடர்ச்சியாக பிஜு ஜனதா தளம் 2024 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது. இதையடுத்து அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக பாண்டியன் அறிவித்தார்.

பாண்டியனின் மனைவி சுஜாதா கார்த்திகேயன். ஒடிசாவை சேர்ந்தவர். ஐஏஎஸ் அதிகாரியான இவரும், பாண்டியனும் பயிற்சி காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். 15 நாட்களுக்கு முன், அவர் தனது விண்ணப்பத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.
மத்திய அரசு அவரது கோரிக்கையை அங்கீகரித்ததாக கூறப்படுகிறது.

2000ம் ஆண்டு ஒடிசா கேடர் அதிகாரியான சுஜாதா கார்த்திகேயன், மத்திய அரசில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கோவிட் காலகட்டத்தில் ஒடிசாவின் உணவு மற்றும் சப்ளை துறை இயக்குனராகவும், பல்கலைகள், கல்வி மற்றும் மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு வரை மிஷன் சக்தி துறையில் ஆணையர் மற்றும் செயலாளராக பணியாற்றினார் சுஜாதா கார்த்திகேயன்.
மே மாதம் இவர் மீது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அதனை தொடர்ந்து அவரை வேறு துறைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தலுக்குப் பின் அவர் நீண்ட விடுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement