வெண்கலம் வென்றார் சுனில் குமார் * ஆசிய மல்யுத்தத்தில்...

அம்மான்: ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் சுனில் குமார் வெண்கலம் வென்றார்.
ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டானில் நடக்கிறது. இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ்டைல்' பிரிவில் 20 (10 ஆண்+10 பெண்) என மொத்தம் 30 பேர் பங்கேற்கின்றனர். தற்போது கிரிகோ ரோமன் பிரிவில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான 87 கிலோ பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் சுனில் குமார், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஜியாசின் ஹுவாங்கை சந்தித்தார்.
இதில் சுனில் குமார், 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். கடந்த 2019ல் வெள்ளி, 2020ல் தங்கம் வென்ற இவர், தற்போது மூன்றாவது முறையாக (2022, 2023, 2025) வெண்கலம் வசப்படுத்தினார்.
நேற்று நடந்த 97 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நிதேஷ் சிவாச், கஜகஸ்தானின் இலியாஸ் குச்சிகோவை சந்தித்தார். இதில் நிதேஷ் 9-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் ஈரானின் சராவியிடம் தோல்வியடைந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார்.

Advertisement