செய்யூர் பகுதியில் 'ஓவர்லோடு' லாரிகள் அதிகாரிகள் கடிவாளம் போடுவது அவசியம்

செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான தொன்னாடு, ஓணம்பாக்கம், கொளத்துார், பெரியவெண்மணி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்குவாரிகளில் இருந்து லாரிகள் வாயிலாக ஜல்லி, எம்--சாண்ட், பி-சாண்ட், கருங்கற்கள் போன்றவை கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
குவாரியில் இருந்து செல்லும் லாரிகள், அரசு விதிகளை மீறி அதிகப்படியான பாரம் ஏற்றிச் செல்வது, பாரம் ஏற்றிச் செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், லாரிகளை பின்தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லிகற்கள் சாலை ஓரத்தில் தேங்குவதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
செய்யூர் - போளூர் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் தொடர்ந்து ஜல்லி கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கடந்த இரண்டு மாதங்களாக சாலை ஓரத்தில் ஜல்லி கற்கள் தேங்குவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
காவல் துறையினரும் பெயரளவில் மட்டுமே 'ஓவர் லோடு' வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
லாரி உரிமையாளர்கள் அந்த அபராத தொகையை செலுத்திவிட்டு, மீண்டும் ஓவர்லோடு ஏற்றிச்செல்வது வழக்கமாக தொடர்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதை கண்காணித்து, மூன்று முறை ஓவர் லோடு ஏற்றிச் சென்று அபராதம் விதிக்கப்படும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
தொடர்ந்து லாரிகளில் ஓவர் லோடு ஏற்றி விடும் கல்குவாரி மற்றும் கிரஷர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.