பஸ் நிறுத்தங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த பயணியர் எதிர்பார்ப்பு

மறைமலைநகர்:செங்கல்பட்டு நகர பகுதியில், புதிய பேருந்து நிலையம் உள்ளது.

இங்கு இருந்து தாம்பரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாமல்லபுரம், கல்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தடங்களில் குறிப்பிட்ட கி.மீ., துாரம் இடையே கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் வகையில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதி முறையாக இல்லாததால் பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவியர், முதியவர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பயணியர் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்ட தலைநகர் என்பதால் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், எஸ்.பி., அலுவலகம், அரசு மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு உள்ள பேருந்து நிறுத்தங்களில் குடிநீர் வசதி இல்லாததால், காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் அதிகரித்து வருவதால், குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழுதான சுத்திகரிப்பு நிலையம்

செங்கல்பட்டு நகராட்சி சார்பில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில், 'நமக்கு நாமே திட்டம்' 2021 - -2022ன் கீழ், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல், பாழடைந்து உள்ளது. இதை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement