தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தாக கடக்கும் மக்கள்

கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே புதுவாயல் சந்திப்பு உள்ளது. இங்கு சென்னை, ஆந்திரா, பெரியபாளையம் ஆகிய மூன்று திசை சாலைகள் சந்திக்கின்றன.

சிறுவாபுரி, பெரியபாளையம் கோவில் வரும் பக்தர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என, தினமும் ஆயிரக்கணக்கானோர் இச்சந்திப்பில் இறங்கி, பேருந்துகள் மாறி செல்வது வழக்கம்.

இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை, பயணியர் மற்றும் பகுதிவாசிகள் ஆபத்தாக கடந்து சென்றதால் விபத்துகள் அதிகரித்தன. இதை தொடர்ந்து, ஓராண்டுக்கு முன் மீடியனை கடக்க முடியாதபடி, 5 அடி உயரத்திற்கு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.

தடுப்பு அமைத்த பின், ஒரு சிலர் மட்டுமே சுற்றி செல்கின்றனர். பெரும்பாலானோர் பேருந்தை பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், இரும்பு தடுப்பு மீது ஏறுவதும், அதன் அடிப்பகுதியில் படுத்தபடி நுழைந்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

குறிப்பாக, பெண்கள் அவ்வாறு கடக்கும் போது பல சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால், விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, புதுவாயல் சந்திப்பில், மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க, கவரைப்பேட்டை போலீசாரும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement