கவலைப்படாதே ஷஷாங்க் * என்ன சொன்னார் ஷ்ரேயாஸ்

ஆமதாபாத்: ''எனது சதம் குறித்து கவலைப்படாதே. ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி அல்லது சிக்சருக்கு அனுப்பு என்றார் ஷ்ரேயஸ்,'' என தெரிவித்துள்ளார் ஷஷாங்க்.
குஜராத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப் அணி (243/5), குஜராத்தை (232/5) 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் (97) சதத்தை நெருங்கினார். மறுபக்கம் கடைசி ஓவரின் 6 பந்தையும் எதிர்கொண்ட ஷஷாங்க், ஷ்ரேயசிற்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் அவர் சதம் அடிக்க முடியாமல் போனது.
இதுகுறித்து ஷஷாங்க் சிங் கூறியது:
உண்மையில், முதலில் ஸ்கோர்போர்டை நான் பார்க்கவே இல்லை. முதல் பந்தில் பவுண்டரி அடித்த பிறகு தான் இதைக் கவனித்தேன். ஷ்ரேயஸ் 97 ரன்னில் இருந்தார். இதனால் ஒரு ரன் மட்டும் எடுத்து உங்களுக்கு பேட்டிங் வாய்ப்பு தரவா என்ற கேட்க இருந்தேன். எனினும் இதுகுறித்து அவரிடம் எதுவும் பேசவில்லை.
இதற்கு முன், என்னிடம் வந்த ஷ்ரேயஸ், ' எனது சதம் குறித்து கவலைப்படாதே. ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அல்லது சிக்சர் என விளாசு,' என்றார். இப்படிச் சொல்வதற்கு துணிச்சல் வேண்டும். ஏனெனில் 'டி-20' கிரிக்கெட்டில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. இவர் கொடுத்த ஊக்கம் காரணமாக எனது தன்னம்பிக்கை அதிகரித்தது. கடந்த 10-15 ஆண்டுகளாக ஷ்ரேயசை பார்த்து வருகிறேன். எப்போதும் போன்று தான் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement