இந்திய கால்பந்தின் எதிர்காலம்... * பயிற்சியாளர் மார்குயஸ் ஏமாற்றம்

ஷில்லாங்: ''வங்கதேசத்திற்கு எதிராக 'டிரா' செய்தது ஏமாற்றமாக, கோபமாக உள்ளது. இந்திய கால்பந்து மூன்று அடி பின்னோக்கி சென்று விட்டது,'' என பயிற்சியாளர் மார்குயஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் இந்தியா (126 வது இடம்), வங்கதேசம் (185) மோதின. ஷில்லாங்கில் நடந்த இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. தரவரிசையில் 59 இடம் பின்தங்கிய வங்கதேசத்தை வெல்ல முடியாமல் ஏமாற்றியது இந்திய அணி.
இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் மனோலா மார்குயஸ் கூறியது:
எனது கால்பந்து வாழ்க்கையின் கடினமான பத்திரிகையாளர் சந்திப்பு இது. ஏனெனில் வங்கதேசத்திற்கு எதிராக 'டிரா' செய்தது மிகுந்த ஏமாற்றமாகவும், கோபமாகவும் உள்ளது. கடந்த 2024 செப்டம்பர் மாதம் நடந்த மொரிசியஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் ஒவ்வொரு முறையும் சிறப்பாகவே செயல்பட்டோம்.
ஆனால் தற்போது இரண்டு, மூன்று அடி பின்னோக்கி சென்று விட்டோம். இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது பாதியில் சற்று மீண்டாலும், வெற்றி பெறவில்லை. ஒரு புள்ளி கிடைத்தது மட்டும் ஆறுதல். முன்னணி வீரர்கள் காயத்தால் களமிறங்கவில்லை என்றாலும், இதை காரணமாக கூற விரும்பவில்லை.
கால்பந்தில் சிறப்பாக விளையாடினாலும், தற்காப்பு, தாக்குதல், என பல பிரிவுகளிலும் எப்போதும் முன்னேற்றம் இருக்க வேண்டும். வங்கதேசத்திற்கு எதிரான போட்டி நடந்த தினம், எங்களுக்கானதாக இல்லை. தவிர எங்களது பிரிவில் நடந்த மற்ற போட்டிகளும் 'டிரா' ஆனது ஆறுதல் தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement