'அப்பர்-அமராவதி'- 60 ஆண்டுகளாக இழுபறி! கரூர், திருப்பூர் மாவட்டத்தில் அதிருப்தி

உடுமலை:
அமராவதி அணைக்கு, மழைக்காலத்தில் கிடைக்கும் அதிக நீர்வரத்தை தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கான, அப்பர்-அமராவதி திட்டம், 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இரு மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை, 4 டி.எம்.சி., கொள்ளளவு உடையதாகும். திருப்பூர், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணை நீர் பிடிப்பு பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலையில், 838 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது.அணையில், 4 டி.எம்.சி., மட்டுமே தேக்க முடியும் என்பதால், வடகிழக்கு பருவமழைக்காலங்களில், உபரியாக ஆற்றில், சராசரியாக, 3 டி.எம்.சி., தண்ணீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது.

பருவமழைக்கு பிறகு, ஆயக்கட்டு பாசனத்துக்கு, குறிப்பிட்ட சுற்றுகள் தண்ணீர் திறந்ததும், நீர்மட்டம் சரிந்து, கோடை காலத்தில், அணையின் நிலை பரிதாபமாக மாறி விடும். அப்போது, கரும்பு சாகுபடிக்கு கூட தண்ணீர் கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, மழைக்காலத்தில், அணைக்கு அதிகளவு கிடைக்கும் தண்ணீரை தேக்க புதிய நீர் தேக்கம் அமைத்தால், ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி மேற்கொள்ள முடியும் என்பது இரு மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாகும்.

அமராவதி பாசன திட்டத்தில், உபரி நீர் வீணாவதை தடுக்க, கடந்த, 1965ல், மத்திய, மாநில அரசு, உயர் மட்ட பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

குறிப்பாக, கேரள மாநில வனப்பகுதியில், உருவாகும், பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய ஆறுகள், இணையும் பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலையில், நீர்த்தேக்கம் அமைத்து, 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதுடன், ஆண்டுதோறும், 5 டி.எம்.சி., வரை தண்ணீரை சேமித்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம் என திட்டமிடப்பட்டது.

'அப்பர்-அமராவதி' திட்டம் என்ற பெயரில், இப்பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டன. பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த, 2016ல், அப்போதைய பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன் பார்லிமென்டில், இக்கோரிக்கை குறித்து வலியுறுத்தி பேசியதால், புதியஅணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க, மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியது.

நீர் மின் உற்பத்தியும், திட்டத்தில், முக்கிய பங்கு வகிப்பதால், மின்வாரிய தலைமை பொறியாளருக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க கடிதம் அனுப்பபட்டது. அதன்பின்னர், எவ்வித நடவடிக்கைகளும் இல்லை.

கடந்த 60 ஆண்டுகளாக இழுபறியாக இருக்கும் இத்திட்டத்துக்கு, தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இரு மாவட்ட விவசாயிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர்.

Advertisement