இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை மீண்டும் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெட்டப்பாக்கம் பகுதியில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி, தொழில்நுட்ப கல்லுாரிகள், ஐ.டி.ஐ., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அதிகளவு மாணவ,மாணவிகள் செல்கின்றனர். இங்கிருந்து கல்லுாரிகளுக்கு தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனுார், மதகடிப்பட்டு, பாகூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் மாணவர்கள் நெட்டப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் அவரவர் கிராமங்களுக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டும்.
மேலும் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்துதான் புதுச்சேரி, பன்ருட்டி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு பொதுமக்கள பஸ் பிடித்து செல்கின்றனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிறுத்தத்தில் கட்டப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையை வடிக்கால் வாய்க்கால் கட்டுவதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் இடித்து அப்புறப்படுத்திவிட்டு வடிக்கால் வாய்க்கால் அமைத்தனர்.
அதன்பிறகு இப்பகுதியில் நிழற்குடை அமைக்கவில்லை, இதனால், நெட்டப்பாக்கம் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் மற்றும் மாணவர்கள் மழை, வெயில் காலங்களில் தனியார் கடைகளில் தஞ்சம் அடைகின்றனர்.
ஆகையால் நெட்டப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டித்தருவதற்கு தொகுதி எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.