பிரேசிலை வென்றது அர்ஜென்டினா * உலக கோப்பை தொடருக்கு தகுதி

பியுனஸ் ஏர்ஸ்: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது அர்ஜென்டினா அணி.
அமெரிக்கா, கனடாவில் வரும் 2026ல் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இம்முறை 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்றில் 10 அணிகள் மோதுகின்றன. 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இதன் 14 வது போட்டி (மொத்தம் 18) நேற்று நடந்தன. பொலிவியாவில் நடந்த போட்டியில் பொலிவியா, உருகுவே மோதின. இப்போட்டி 0-0 என 'டிரா' ஆனது.
இதனால், ஏற்கனவே 13 போட்டியில் 28 புள்ளி எடுத்திருந்த அர்ஜென்டினா, 'டாப்-6' இடத்தை உறுதி செய்து, உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இம்மகிழ்ச்சியில் நேற்று சொந்தமண்ணில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா, பிரேசிலை எதிர்கொண்டது. கேப்டன் மெஸ்ஸி., காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
அர்ஜென்டினா அணிக்கு ஆல்வரெஸ் (4வது நிமிடம்), பெர்ணான்டஸ் (12), அலிஸ்டர் (37), சைம்லைன் (71) தலா ஒரு கோல் அடித்தனர். பிரேசில் சார்பில் குன்ஹா (26) மட்டும் கோல் அடித்தார். முடிவில் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடரும் முதலிடம்
இதையடுத்து தென் அமெரிக்க அணிகளுக்கான பிரிவில் அர்ஜென்டினா (31 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த 5 இடத்தில் ஈகுவடார் (23), உருகுவே (21), பிரேசில் (21), பராகுவே (21), கொலம்பியா (20) உள்ளன.