தி.நகர் பெருமாள் கோவிலில் யுகாதி வருட பிறப்பு நிகழ்ச்சி

சென்னை, யுகாதி வருட பிறப்பை முன்னிட்டு, தி.நகர்., வெங்கடேசப் பெருமாள் கோவிலில், இன்று பஞ்சாங்கம் வாசித்து பலன்கள் கூறப்படுகிறது.

யுகத்தின் ஆரம்பம் யுகாதி என, அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாடப்படுகிறது. மனித வாழ்க்கையில், இன்ப - துன்பங்கள் மாறி மாறிவரும் என்பதையும், அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், இது உணர்த்துகிறது.

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான், பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்நாளில் புது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், சைத்ர மாதத்தின் முதல் நாள், வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் முக்கியத்துவம் பெறுகிறது.

யுகாதியன்று, எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, யுகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் துவங்குகிறது.

இந்த யுகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.

திருப்பதி - திருமலை கோவில் உற்சவம் அனைத்தும், யுகாதி முதல் நாளில் துவங்குவது வழக்கம்.

சென்னை, தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், 'யுகாதி ஆஸ்தானம்' என்னும் வழிபாடு இன்று நடக்கிறது.

இன்று காலை 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை 8:30 மணிக்கு நைவேத்யம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு சர்வ தரிசனம் துவங்குகிறது.

அதை தொடர்ந்து, யுகாதி ஆஸ்தானத்தில் ஆராதனை, வஸ்திர பிரதக்ஷனம், சமர்ப்பணம் நடக்கிறது.

பின், ஸ்ரவனம் அரங்கில் பஞ்சாங்கம் படிக்கப்பட்டு பலன் கூறப்படுகிறது. அதேபோல, தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலிலிலும் உகாதி ஆஸ்தான வழிபாடு நடக்கிறது.

Advertisement