நிஜமாகப் போகின்றன ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் 3 வழித்தடங்களில் 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டம் 'டெண்டர்' வெளியிட்டது மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை:சென்னை - விழுப்புரம் உட்பட மூன்று வழித்தடங்களில், 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 'டெண்டர்' வெளியிட்டுள்ளது. மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பங்களிப்போடு, 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குறைந்த நிறுத்தங்கள், விரைவான ரயில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முதற்கட்டமாக, சென்னை - விழுப்புரம், சென்னை - வேலுார், கோவை - சேலம் ஆகிய வழித்தடங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 'டெண்டர்' வெளியிட்டு உள்ளது.

150 கி.மீ., வேகம்



இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று வழித்தடங்களில், செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டம் செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்போடு, மெட்ரோ ரயில் திட்டத்தை போல், இந்த திட்டமும் செயல்படுத்தப்படும்.

ஆனால், வெளிமாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இருக்கும். மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்லும். குறைவான நிறுத்தங்களே இருக்கும். ரயில் பாதைகள் அனைத்தும் மேம்பாலத்தில் அமையும்.

பயணியர் தேவைக்கு ஏற்றார்போல், எட்டு முதல் 15 பெட்டிகள் வரை, இந்த ரயிலில் இணைக்கலாம்.

1.30 மணி நேரம்



சென்னை - விழுப்புரம், சென்னை - வேலுார், கோவை - சேலம் வழித்தடங்களில், இந்த திட்டம் செயல்படுத்தும்போது, ஒன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும்.

இதற்கு 'டெண்டர்' வெளியிட்டுள்ளோம். அடுத்த ஆறு மாதங்களில், அறிக்கை தயாராகி விடும். எந்த வழித்தடம், நிறுத்தங்கள் அமைவிடம், பயணியர் எண்ணிக்கை, தேவைப்படும் நிலம், செலவு உள்ளிட்ட விபரங்கள் அறிக்கையில் இடம்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement