பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலங்களில்தமிழகம் முதலிடம்; அமைச்சர் செந்தில்பாலாஜி


பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலங்களில்தமிழகம் முதலிடம்; அமைச்சர் செந்தில்பாலாஜி


கரூர்:''இந்தியாவில், பெண்கள் அதிகம் பணியாற்றக்கூடிய மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில், பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, 'என் கல்லுாரி கனவு' எனும், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு சென்றால் மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. படித்து விட்டு, நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதற்காக, 'நான் முதல்வன் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்காக, ஒரு கோடியே, 15 லட்சம் பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கக்கூடிய மகளிர் உரிமை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
இங்கு, விருப்பப்பட்டவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம். விருப்பம் இல்லாமல் கட்டாயமாக கொண்டு வந்து, ஹிந்தியை திணிப்பதை எதிர்க்கிறோம். இந்தியாவில், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிலும், தொழில் நிறுவனங்களில் மகளிர் பெருமளவில் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இதனால் தான், இந்தியாவில் பெண்கள் அதிகம் பணியாற்றக்கூடிய மாநிலங்களில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. துணை முதல்வர் உதயநிதி முயற்சியால், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை மாற்றி கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு பேசினார்.மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement