பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னவர் அடித்து கொலை
போத்தனுார்:கோவை, போத்தனுார் -- செட்டிப்பாளையம் சாலையில் சத்யமூர்த்தி என்பவரது கட்டுமான பொருட்கள் வாடகைக்கு விடும் கடை உள்ளது. இங்கு திண்டுக்கல், மணியக்காரன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், 34, என்பவர் ஒரு மாதத்திற்கும் மேலாக டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அதுபோல் கேரள மாநிலம், ஆலுவா பகுதியைச் சேர்ந்த ஷியாஸ், 36, என்பவர், கடந்த ஒரு வாரமாக டிரைவராக வேலை பார்த்து வந்தார். இருவரும் உடன் பணிபுரியும் முருகன் என்பவருடன், கடையிலுள்ள அறையில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது குடித்தபோது ஷியாஸ் அதிக சப்தத்துடன் 'டிவி'யில் பாட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது.
சப்தத்தை குறைக்க, ஆறுமுகம் கூறியதால், ஆத்திரமடைந்த ஷியாஸ், பீர் பாட்டிலால் தாக்கியதில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் ஆறுமுகத்தை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு இறந்தார். மூன்று போலீஸ் தனிப்படைகள் அமைத்து, தப்பிய ஷியாசை போலீசார் தேடுகின்றனர்.