குண்டு மிளகாய் வத்தல் ரூ.5000 விலை வீழ்ச்சி

ஆர்.எஸ்.மங்கலம்,:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தையில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த குண்டு மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.5000 விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

ஆர்.எஸ். மங்கலத்தில் வாரந்தோறும் மிளகாய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த வாரச்சந்தைக்கு 300 குவிண்டால் (ஒரு குவிண்டால் 100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்திருந்தது. வெளியூர் வியாபாரிகள் வத்தல்களுக்கு விலை நிர்ணயம் செய்தனர்.

மார்ச் இரண்டாவது வாரத்தில் முதல் தர பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.21,500க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று குவிண்டாலுக்கு ரூ.5000 விலை வீழ்ச்சி அடைந்து ரூ.16,500க்கு விற்பனையானது. அதே போல் குவிண்டால் ரூ.15,000த்திற்கு விற்பனையான இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தல் ரூ.1000 விலை வீழ்ச்சி அடைந்து ரூ.14,000 க்கு விற்பனை ஆனது.

கடந்த 15 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.5000 வரை வத்தல் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். பெரும்பாலான வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலை நிர்ணயம் செய்வதால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Advertisement