கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நேற்று காலமான அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இன்று காலை கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: எம்ஜிஆரிடம் மிகுந்த மரியாதை பெற்றவர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர். தென் மாவட்ட மக்களிடையே மிகுந்த மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர்.


நான் முதல்வராக பொறுப்பேற்றபோது நேரில் சந்தித்து, எனக்கு முழு ஆதரவு வழங்கியவர். 'தென் மாவட்டத்தில் உங்களுக்காக முழுமையாக துணை நிற்பேன்' என்று பலமுறை நேரில் வந்து கூறியவர்.

அவரது நினைவெல்லாம் எப்போதும் கட்சியே. அவருடைய மரணம் இயக்கத்திற்கு பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement