அமெரிக்க ராணுவ வீரர்கள் 4 பேர் மாயம்: லித்துவேனியாவில் தீவிர தேடுதல் வேட்டை

வில்னியஸ்: லித்துவேனியாவில் மாயமான அமெரிக்க ராணுவ வீரர்கள் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஐரோப்பாவின் பால்டிக் பிராந்திய நாடுகளில் ஒன்று லித்துவேனியா. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் இதுவும் ஒன்று. இந்த நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாக பகை இருக்கிறது. ரஷ்யா, உக்ரைனுக்கு சொந்தமான கிரீமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்த போது, தங்கள் நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என லித்துவேனியா கருதியது.
அதன் தொடர்ச்சியாக, அந்த நாட்டில் அமெரிக்க ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், லித்திவேனியாவின் பப்ரேட் நகருக்கு அருகில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் 4 பேர் மாயம் ஆகினர். அவர்கள் வாகனம் மட்டும் நீரில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியை அமெரிக்கா ராணுவம் மற்றும் லித்துவேனியா ஆயுதப்படைகள் ஆகிய இணைந்து மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க வீரர்கள் காணாமல் போன பகுதி, பெலாரஸ் நாட்டின் எல்லைக்கு அருகே அமைந்துள்ள பகுதியாகும். இதனால் அமெரிக்க வீரர்கள் வெள்ளத்தில் மூழ்கினார்களா, அல்லது தாக்குதலுக்கு ஆளானார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே, காணாமல் போன ராணுவ வீரர்கள் குறித்து தகவல் தெரியுமா? என நிருபர்கள் எழுப்பி கேள்விக்கு, 'இல்லை. எனக்கு தகவல் தெரியாது' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து லித்துவேனியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் டோவிலே சகாலியேனே கூறியதாவது: காணாமல் போன ராணுவ வீரர்கள் பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்தமடைந்தேன். அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். ராணுவ வீரர்களை தேடும் பணி நடக்கிறது. மீட்கப்பட்டதும் அவசர மருத்துவ உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி
-
ஐதராபாத் அணி பேட்டிங்; டில்லி அணிக்காக அறிமுகமாகும் கே.எல். ராகுல்
-
எம்புரான் சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த மோகன்லால்: பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு
-
உல்லாச கப்பலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?
-
மியான்மர் நாட்டில் பேரழிவு; நிலநடுக்கம் ஒரு பக்கம்; உள்நாட்டுப்போர் மறுபக்கம்!
-
தமிழகத்தில் ஏப்., 2, 3ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை