சி.பி.சி.ஐ.டி., விசாரணை மீது நம்பிக்கை இல்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

13

சென்னை: சி.பி.சி.ஐ.டி., விசாரணை மீது நம்பிக்கை இல்லை என 'யு டியூபர்' சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.


@1br'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டில், கழிவு நீர் கொட்டி, அறைகளில் மலத்தை வீசிய, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இன்னும் வழக்கின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இன்று (மார்ச் 27) சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் அளித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சவுக்கு சங்கர் கூறியதாவது: சட்டப்படி விசாரணை நடத்த வேண்டியது அவர்களது கடமை. என் வீட்டில் கழிவு நீர் கொட்டிய விவகாரம் தொடர்பாக சரியான விசாரணை நடைபெறவில்லை. சி.பி.சி.ஐ.டி., இந்த வழக்கை நியாயமாக நடத்தும் என்று நம்பிக்கை இல்லை.


புகாரில் என் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது. 50 பேர் கும்பலாக வந்து என் தாய் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள் என்று கூறியுள்ளேன். கோர்ட்டில் வழக்கு தொடர்வேன். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்து அகில இந்திய அளவில் தன்னை தலைவராக ஆக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.


என் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, தி.மு.க., தவிர அனைத்து கட்சி தலைவர்களும் கண்டித்து விட்டார்கள். உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இதில் சம்பந்தபட்ட அனைவரையும் கைது செய்துவிட்டோம் என்று சொல்வது தான் அரசியல் தலைவருக்கான கடமை. இந்த ஆட்சியில் நடப்பது எதுவுமே தமிழக முதல்வருக்கு தெரிவதில்லை. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.

Advertisement