டில்லி அணிக்கு 2வது வெற்றி; ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்

1


விசாகப்பட்டினம்: ஐதராபாத்துக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


விசாகப்பட்டினத்தில் நடந்த பிரீமியர் லீக் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் டில்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் ரன் அவுட்டானார்.


தொடர்ந்து, இஷான் கிஷான் (2), நிதிஷ் ரெட்டி (0), ஹெட் (22) ஆகியோர் ஸ்டார்க் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஐதராபாத் அணி 37 ரன்னுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.


அதன்பிறகு ஜோடி சேர்ந்த அனிகேத் வர்மா மற்றும் கிளாசன் ஜோடி அதிரடியை காட்டியது. இதனால், ஐதராபாத் அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. கிளாசன் 32 ரன்னில் அவுட்டானாலும், மறுமுனையில் அபாரமாக ஆடிய அனிகேத் வர்மா அரைசதம் அடித்தார். அவர் 41 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்.


தொடர்ந்து வந்த வீரர்களும் ஸ்டார்க்கின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால், அந்த அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், குல்தீப் 3 விக்கெட்டுக்களையும், மொஹித் ஷர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய டில்லி வீரர் ஸ்டார்க், அதிக விக்கெட்டுக்களை எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'பர்ப்பிள் கேப்'-பை கைப்பற்றினார். போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். 2வது இடத்தில் சென்னை அணியின் நூர் அகமது (7) இருக்கிறார்.

164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டில்லி அணிக்கு டூ பிளசிஸ், ஜேக் பிரேசர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். டில்லி அணியினர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ஐதராபாத் வீரர்கள் தவறவிட்டனர். இதனால், டில்லி அதிரடியாக ரன் குவித்தது.

சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஜேக் பிரேசர் (38), கே.எல்.ராகுல் (15) ஆகியோர் ஓரளவுக்கு பங்களிப்பு கொடுத்தனர். இறுதியில் அபிஷேக் போரல் (34), ஸ்டப்ஸ் (21) ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 16 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன்மூலம், டில்லி அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.



டெய்லரின் மகன்

இந்தப் போட்டியில் டில்லி அணி இழந்த 3 விக்கெட்டுக்களையும் ஐதராபாத் அணியின் ஸ்பின் பவுலர் ஜீஷன் அன்சாரி கைப்பற்றினார். இவர், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை டெய்லர் வேலை செய்கிறார். இவரின் திறமையை அறிந்து பயிற்சியாளர் கோபால் சிங் இலவசமாக பயிற்சி கொடுத்தார். உ.பி.,யைச் சேர்ந்த ஜீஷனை ரூ.40 லட்சத்துக்கு ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது.

Advertisement