ஷேன் வார்னே மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை: வெளியான தகவலால் பரபரப்பு

5


பாங்காக்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஷேன் வார்னே உயிரிழந்து 3 ஆண்டு ஆன நிலையில், அவரது மரணம் குறித்து தற்போது வெளியாகி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் அசைக்க முடியாத வீரராகவும், உலகளவில் தலைசிறந்த ஸ்பின்னராகவும் திகழ்ந்தவர் ஷேன் வார்னே. இவர் கடந்த 2022ம் ஆண்டு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது, ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது இறப்பிற்கு மாரடைப்பு என்று தான் கூறப்பட்டது.

இந்த நிலையில், வார்னேவின் மறைவு குறித்து திடுக்கிடும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதாவது, ஷேன் வார்னே இறந்து கிடந்த அறையில் இருந்து உடலுறவுக்கான காமகிரா மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால், அதனை போலீசார் திட்டமிட்டே மறைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காமகிரா மாத்திரையில் சில்டெனாபில் சிட்ரேட் என்ற மூலப்பொருள் இருக்கிறது. எனவே, இதனை உட்கொண்டதால் தான் வார்னேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த ஷேன் வார்னேவின் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக, இந்த மாத்திரை விவகாரத்தை போலீசார் மூடி மறைத்ததாகவும், இதில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

இது குறித்து தாய்லாந்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "உயரதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததால் மாத்திரையை அகற்றினோம். ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் இருந்து இதுபற்றிய உத்தரவு வந்திருக்கலாம். ஏனென்றால் இது சென்சிட்டிவான விவகாரம். ஷேன் வார்னேவின் மரணம் குறித்த அறிக்கையிலும் கூட, காமகிரா மாத்திரை குறித்து குறிப்பிடப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் வாந்தி மற்றும் ரத்த கறையும் இருந்தது," இவ்வாறு கூறினார்.

Advertisement