இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.,: பிரதமர் மோடி புகழாரம்!

22

நாக்பூர்: "ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, அழிவற்ற இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழ்கிறது," என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.


பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு வந்த பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

ஆர்.எஸ்.எஸ். நமது சனாதன தர்மம், ஒற்றுமை மற்றும் தேசியத்துவத்தின் அடையாளம். இந்தியாவின் அழிவற்ற கலாசாரத்தின் ஆலமரமாக திகழ்கிறது. அதே நேரத்தில் நவீன காலத்தின் சவால்களுக்கு தீர்வுகளும் கூறுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல துறைகளில் ஆர்எஸ்எஸ்ஸின் சேவைப்பணிகள் மகத்தானது.

ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் தன்னலமின்றி பணியாற்றி வருகின்றனர்.
மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மாதவ்ராவ் சதாசிவ்ராவ் கோல்வால்கரின் நினைவாக மாதவ் நேத்ராலயா 2014ல் நிறுவப்பட்டது.

ஏழைகளில் ஏழைகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை. பா.ஜ., ஆட்சியில் செயல்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது .


எங்கள் அரசாங்கம் மக்களுக்கு மேலும் சிறந்த மருத்துவர்களை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறுகின்றனர்,
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement