இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மதபோதகருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை!

2

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இளம்பெண்களை மத பிரசாரத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட கிறிஸ்துவ மத போதகர் ஜோஷ்வா இமானுவேல் ராஜ், 47, என்பவருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனையும், உதவிய வினோத்குமாருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து திருநெல்வேலி மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த டேவிட் மகன் ஜோஷ்வா இமானுவேல் ராஜ் 47. இவர் 2016ல் திருநெல்வேலியில் ஒரு கிறிஸ்தவ அமைப்பை நிறுவி மதபோதகராக செயல்பட்டார். இவருடன், விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த வினோத்குமார், 41, உதவியாளராக இருந்தார்.


இளம் பெண்களை மதபோதனைகளுக்கு அழைத்து சென்று தனிமையில் வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார் எழுந்தது. மேலும், பெண்களிடம் நகைகளை பறித்து மோசடி செய்ததாகவும் புகார் கூறினர்.

2016ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று, திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று பெண்கள் இவர்களுக்கு எதிராக அப்போதைய மாவட்ட எஸ்.பி. விக்கிரமனிடம் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணைகளால் மனமுடைந்த 22 வயது இளம்பெண் 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி அன்று தாழையூத்து அருகே ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.


இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம், மதபோதகர் ஜோஷ்வாவிற்கு கற்பழிப்பு உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். உதவியாளர் வினோத்குமாருக்கு 4 குற்றச்சாட்டுகளில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே அவர்கள் அனுபவித்த சிறை நாட்கள் கழித்து, மீதமுள்ள தண்டனையை ஏககாலமாக அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Advertisement