தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக விளங்கும் கம்பராமாயணம்: கவர்னர் நெகிழ்ச்சி

மயிலாடுதுறை:தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் விளங்குகிறது, அரசியல் காரணங்களுக்காக தமிழ் கலாசாரம் மறக்கடிக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் கம்பர் பிறந்து வாழ்ந்த தேரழுந்தூர் கிராமத்தில் மத்திய கலாசார அமைச்சகத்தின், தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில்கம்பராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கம்பராமாயண விழா மார்ச் 30 முதல் ஏப்.6-ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கிறது. கம்பராமாயண தொடக்க விழா தேரழுந்தூரில் உள்ள கம்பர் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கம்பராமாயண விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் கவர்னர் ரவி பேசியதாவது:
நான் பாட்னாவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, கம்பராமாயணத்தைப் பற்றி அறிந்திருக்கிறேன். அப்போதிலிருந்து இங்கு வரவேண்டும் என்ற ஆசை. நான் தமிழகத்துக்கு வந்த பிறகு 2வது முறையாக நிறைவேறியிருக்கிறது. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துளசிதாசர் பற்றி பேசப்படும். அதே போல தமிழகத்தில் கம்பர் பற்றிய பேச்சு எங்கும் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவ்வாறு இல்லை என்பது வருத்ததுக்குரியது. பாரதிய கலாசாரத்தின் தந்தை கம்பர். தேசத்தின் அடையாளமாக விளங்குபவர் ஸ்ரீராமர். ஸ்ரீ ராமரை சாமானிய மக்களின் மனதில் கம்பராமாயணம் பதிய வைத்துள்ளது.
கம்பர் கவிஞர் மட்டுமல்ல, பாரதத்தின் நாயகன். தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் உள்ளது. உண்மையில் தமிழ் கலாசாரத்தை பற்றி பேச வேண்டும் என்றால், கம்பரையும், கம்பராமாயணம் குறித்தும் பேச வேண்டும். இங்கு கலாசாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் அரசியல்மயமாகியுள்ளது. அரசியல் காரணங்களால் கலாசாரம் மறக்கடிக்கப்படுவதை ஏற்க முடியாது.
தமிழக முழுவதும் உள்ள 45-க்கும் மேற்பட்ட கம்பன் கழகங்கள் மூலம் கம்பராமாயணம் உயிரோட்டத்துடன் வைக்கப்பட்டுள்ளது. கம்பன் கழகங்களுடன் ராமாயணம் நின்றுவிடக் கூடாது, மக்கள் மனங்களில் இடம்பெற வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மொழியின் மீதும், தமிழ் கலாசாரத்தின் மீதும் மிகபெரிய பக்தி கொண்டவர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரையில் தமிழ் மொழிக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் பிரதமர் மோடியை போல வேறு யாரும் செய்ததில்லை. காசி தமிழ்ச் சங்கமம், பல்வேறு நாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தது, பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைத்தது, நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பலவற்றை செய்துள்ளார். கம்பரின் பக்தர் மோடி. கம்பராமாயணத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது.
இந்நிகழ்வு ஒரு எளிய தொடக்கமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
-
ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்