துக்க வீடுகளில் படம் பிடிப்பதை தவிர்க்கலாம் : தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: துக்க வீட்டில் அஞ்சலிக்காக, வைக்கப்பட்டிருக்கும் உடலை படம் பிடிப்பதை தவிர்க்கலாம் என்று ஊடகங்களுக்கு தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை:

ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தை ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்?

பார்வையாளர்களை கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?

நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலக்கிறது.

இனிவரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்.

அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வை காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும்; கையில் காமிரா இல்லாமல். இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன் சங்கம் இந்த வேண்டுகோளை வைக்கிறது.

இவ்வாறு தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் தியாகராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement