அரசை விமர்சித்த வெளிநாட்டு மாணவர்கள்... வெளியேறுங்கள்!:விசாக்களை ரத்து செய்து டிரம்ப் அரசு அதிரடி; பதிவுக்கு 'லைக்' போட்டவர்களுக்கும் சிக்கல்

65


வாஷிங்டன்: அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்ட அல்லது கருத்து வெளியிட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாவை, அமெரிக்க அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.


தாமாகவே வெளியேற தவறினால், கைது உட்பட கடுமையான நடவடிக்கைகளை மாணவர்கள் சந்திக்க நேரும் என, ஒவ்வொரு மாணவருக்கும், இ- - மெயில் வாயிலாக அமெரிக்க அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது, உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்லுாரிகளிலும், வெளிநாடுகளைச் சேர்ந்த, 11 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதில், 3.31 லட்சம் பேர் இந்தியர்கள்.

சகஜம்



அமெரிக்க கல்வி நிறுவன வளாகங்களில், அமெரிக்க அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பது சகஜமான காட்சி.


குறிப்பாக வெளிநாடுகள் தொடர்பான அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடப்பதும், அமெரிக்க அதிபரை கேலி செய்து பேனர்கள் ஏந்தி கோஷமிடுவதும் வாடிக்கை. சில நேரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரத்தில் முடிவதும் உண்டு.

கருத்து சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற வகையில், இதுவரை ஆட்சியில் இருந்த அதிபர்கள், இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், குடியரசு கட்சியைச் சேர்ந்த பலருக்கு இது பிடிக்கவில்லை. படிக்க வந்த இடத்தில், எங்கள் அரசுக்கு எதிராக போராடுவது என்ன நியாயம் என்று கேட்கின்றனர். அதிபர் டிரம்ப் அவர்களில் முன்னோடி.


டிரம்ப் அரசில், வெளியுறவு அமைச்சராக இருக்கும் மார்கோ ரூபியோ, அதிபரின் மனநிலையை தெளிவாக பிரதிபலிக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டி அளித்தார்.


அதில், 'அமெரிக்காவில் படித்து பட்டம் வாங்க விரும்புவதாக சொல்லி அனுமதி கேட்கிறீர்கள். நாங்களும் மாணவர்களுக்கான விசா தருகிறோம்.


'ஆனால், இங்கே வந்த பின் படிப்போடு நில்லாமல், உங்கள் நாட்டிலோ, வேறு ஏதோ ஒரு நாட்டிலோ நடக்கும் பிரச்னைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி கலவரம் உண்டாக்கி, கல்லுாரியின் சூழலை கெடுக்கிறீர்கள்.

சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகிறீர்கள். விசா கொடுத்த அரசுக்கு எதிராக செயல்பட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதுவரை பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துவிட்டோம்' என்றார் அமைச்சர் ரூபியோ.

புது செயலி

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உரை நிகழ்த்தியவர்கள், கோஷம் போட்டு போலீஸ் மீது கல் வீசியவர்கள் என்று வீடியோ பதிவுகளை பார்த்து பார்த்து, மாணவர்களை அடையாளம் கண்டு வெளியேறச் சொன்னது அரசு.

இப்போது ஒருபடி மேலே சென்று, சமூக ஊடகத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக யாரோ போட்ட பதிவுக்கு 'லைக்' போட்டவர்கள், பதிவை ஷேர் செய்தவர்கள் ஆகியோரையும் கண்டுபிடித்து வெளியேறச் சொல்கிறது.

இதற்காக ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறது. 'கேச் அண்டு ரிவோக்' என்பது அதன் பெயர். கண்டுபிடி, விசாவை ரத்து செய் என்பது உள் அர்த்தம்.

பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புகள், ஹமாஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவற்றுக்கு ஆதரவாக மாணவர்கள் குரல் கொடுப்பதை, தேச விரோத செயலாக டிரம்ப் அரசு பார்க்கிறது.

இதுபோன்ற இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, விசா கொடுக்காமல் மறுக்குமாறு துாதரகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

படிப்பு முடங்கும்

அடையாளம் காணப்படும் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவிக்கும் தனி, 'இ - -மெயில்' அனுப்பப்படுகிறது. இதில், பல இந்திய மாணவர்களும் அடங்குவர்.


'தேச விரோத செயல்களுக்காக, உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக, நீங்களாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; இல்லை எனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அமெரிக்க அரசின் இந்த அதிரடி முடிவால், ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களின் படிப்பு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement