ஹிமாச்சல் நிலச்சரிவு 6 பேர் உயிரிழப்பு

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லுவில், நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் மீது வேரோடு மரம் சாய்ந்து விழுந்ததில், ஆறு பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சலின் குல்லு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற பகுதியில், நேற்று மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது, அப்பகுதியில் உள்ள குருத்வாரா அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது, பழமையான பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதில், வாகனங்களில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஏழு பேர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குல்லு, மண்டி உள்ளிட்ட இடங்களில், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement