எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு ஒருவர் பலி; ஏழு பேர் படுகாயம்

கட்டாக்:ஒடிசாவில், பெங்களூரு - காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் பலியானார்; ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக, அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா வரை செல்லும், 'ஏசி' விரைவு ரயில், நேற்று காலை 11:54 மணிக்கு, ஒடிசாவின் நெற்குந்தி ரயில் நிலையம் அருகே சென்ற போது, ரயிலின் 11 பெட்டி கள் தடம் புரண்டன.

சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஒடிசா தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உள்ளூர் மக்களும், ரயில்வே போலீசாரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில், ரயிலில் இருந்த ஆண் பயணி ஒருவர் பலியானார்; படுகாயமடைந்த ஏழு பேர் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மீட்புப் பணிகள் குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அசோக் குமார் மிஸ்ரா கூறுகையில், “போர்க்கால அடிப்படையில் நடந்த மீட்புப் பணியால், ரயில் பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது.

''இருப்பினும், சில சோதனைகளுக்கு பின் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை, இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படும்,” என்றார்.

இந்த விரைவு ரயிலில் பயணித்தவர்கள் விபரங்கள் அறிய, தெற்கு ரயில்வே சார்பில், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுளளன. சென்ட்ரல் கட்டுப்பாட்டு அறை: 044 - 25354153, 044 - 25345987, சென்னை சென்ட்ரல்: 044 - 25354140, பெரம்பூர் : 93600 27283, காட்பாடி: 94986 51927, ஜோலார்பேட்டை - 77080 61810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement