ஊட்டிக்கு பூங்கா திட்டத்தை மாற்ற கூடாது கூடலுார் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கூடலுார்: கூடலுார் நகர மன்ற கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நடந்தது.
நகராட்சி பொறியாளர் பாபு முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் சகிலா: நகராட்சி பகுதியில் குடிநீர் முறையாக 'சப்ளை' செய்வதில்லை.
வெண்ணிலா: கோடையில் மக்களின் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
லீலா வாசு: நகராட்சியில் அதிகாரிகள் மக்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதில்லை.
தலைவர்: நகராட்சி ஊழியர்கள் அடிக்கடி விடுப்பில் செல்வதால் பணிகள் மேற்கொள்ள ஆட்கள் இல்லை. பிரச்னைகள் தீர்க்க அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை.
சத்தியசீலன்: அதிகாரிகள் இன்றி கூட்டம் நடத்த கூடாது.
ராஜேந்திரன்: மாதம் ஒருமுறை நடைபெறும் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்பதில்லை. அதிகாரிகள் வராததை கண்டித்து வெளிநடப்பு செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் விபரத்தை தமிழில் தர வேண்டும்.
மும்தாஜ்: அதிகாரிகள் எந்த வேலையும் செய்வதில்லை. கவுன்சிலர்களை மதிப்பதில்லை.
உஸ்மான்: கூட்டத்தில், தலைவர் அல்லது அதிகாரிகள் பதில் கூற வேண்டும். அதிகாரிகளை மட்டும் குறை கூறாமல், சிறப்பு கூட்டம் நடத்தி பட்ஜெட் குறித்து வாதிக்க வேண்டும்.
அனுப்கான்: பட்ஜெட் தொடர்பான தீர்மானத்தை ஒட்டி வைப்பதாக கூறிய நிலையில், அஜந்தாவின் பார்வைக்கு என, தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அர்த்தம் ஆகிறது.
துணைத் தலைவர் சிவராஜ்: கூடலுார் நகராட்சியில், 29 பணிகளுக்கு ஒப்பந்தம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதில், 23 திட்ட மதிப்பீடுகள் மட்டுமே உள்ளது. அதில், 22 பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 'ஆறு பைல்கள் காணவில்லை,' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.தொடர்ந்து, மத்திய அரசு, கூடலுாரில் மலர் பூங்கா அமைக்க ஒதுக்கிய நிதியை, ஊட்டிக்கு மாற்றியதை கைவிட்டு, கூடலுாரில் அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். துணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.