சாணார்பட்டியில் ஜல்லிக்கட்டு

சாணார்பட்டி : சாணார்பட்டி நத்தமாடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டை நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் கண்டு ரசித்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் 742 காளைகளும், 300 வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்தனர். தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடைத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் மேற்பார்வையில் உதவி மருத்துவர் விக்னேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் அசோக் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். காலை 7.35 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இலங்கை அமைச்சர் தொண்டைமான் காளை உட்பட பல்வேறு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
நடிகர் விக்ரம், சாணார்பட்டி கன்னியாபுரம் பகுதியைச் சேர்ந்த நடிகை துஷாரா விஜயன் ஜல்லிக்கட்டை காண வந்தனர். அவர்கள் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். மாடு பிடி வீரர்கள் ஆவிளிப்பட்டி சரவணகுமார் 22, ஓடைப்பட்டி தாமஸ் உட்பட 38 பேர் காயமடைந்தனர். மதுரை திருப்பாலை தினேஷ் காளை அருகில் உள்ள தனியார் விவசாய தோட்ட கிணற்றில் தவறி விழுந்தது. தீயணைப்பு துறையினர் காளையை மீட்டனர்.