நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற அவகாசம்

ஸ்ரீமுஷ்ணம்,; ஸ்ரீமுஷ்ணம்அருகே நீர் நிலை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் அவகாசம் வழங்கினர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கிளை வாய்க்கால் அருகில் நீர் வழி புறம் போக்கை ஆக்கிரமித்து 5 குடும்பத்தினர் குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்கள் வளர்க்கும் பன்றிகளால் அருகில் உள்ள நெல் வயல்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் அவர்களை காலி செய்ய கலெக்டருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில், தேத்தாம்பட்டு கல்லுமேடு பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு மாற்று இடம் வழங்கியும் அவர்கள் செல்லாமல் கிளை வாய்க்கால் பகுதியிலேயே தொடர்ந்து வசித்தனர்.
பல முறை நோட்டீஸ் வழங்கியும் 5 குடும்பத்தினரும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவில்லை. இந்நிலையில் பொதுப்பணித்துறை பிரிவு அலுவலர் ரவிச்சந்திரன், வி.ஏ.ஓ., வினோத்குமார் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பை அகற்ற ஜே.சி.பி.,இயந்திரம் உதவியுடன் நேற்று வந்தனர். இன்ஸ்பெக்டர் வீரசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் கல்வி பயின்று வருவதால் 10 நாட்கள் அவகாசம் வழங்கினால் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்வதாக மக்கள் கூறினார். அதன்பேரில், அதிகாரிகள் அவகாசம் வழங்கினர். வரும் 15 ந்தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரித்து சென்றனர்.