ஹனிமூன் சென்று திரும்பிய புது மாப்பிள்ளை; விமான நிலையத்தில் 'ஷாக்' கொடுத்த முன்னாள் காதலி

கோவை; ஹனிமூன் சென்று விட்டு கோவை திரும்பிய புது மாப்பிள்ளைக்கு 'ஷாக்' கொடுத்த முன்னாள் 'லிவ் இன்' காதலியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு 30க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி பத்தாயிரம் பேர் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால், அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு சென்னையில் இருந்து கோவை வந்த விமானம் தரையிறங்கியது. விமான பயணிகள் எல்லோரும் வெளியில் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் வெளிநாட்டுக்கு தேன்நிலவுக்கு சென்றிருந்த புதுமண தம்பதியினர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.

அப்போது, பயணிகளை வரவேற்கும் பகுதியில் இருந்து திடீரென ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அப்பெண் கனத்த குரலில் ''என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வர்ரியாடா. அவன நம்பாத சொல்லிட்டேன். அவன் மேல் 'ஸ்டேஷன்'ல கம்ப்ளைன்ட் இருக்கு. அவன பிடிங்க, காரில் ஏறி ஓடுறத பாருங்க என்றார்.

இதனிடையில், புது மாப்பிள்ளையை அழைத்து செல்ல வந்த அவரின் உறவினர் ஒருவர் பெண்ணின் கையை பிடித்து சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, அப்பெண் அவரது கன்னத்தில் அறைந்து, அவரின் சட்டையை பிடித்து காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீங்களா என வாக்குவாதம் செய்தார். இதனிடையில் புதுமண தம்பதியினர் அங்கிருந்து காரில் ஏறி சென்றனர்.

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கோவை பெரிய கடைவீதியை சேர்ந்த தொழிலதிபரின் மகனுடன் சென்னையை சேர்ந்த இந்த பெண்ணிற்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன், பிறகு கடந்த இரு மாதங்களுக்கு முன் அப்பெண் கோவை வந்தார். இருவரும் 'லிவ் இன் டு கெதரில்' இருந்து வந்துள்ளனர்.

வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவெடுத்து பெண் பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. வாலிபரின் திருமணத்திற்கு பெண் சென்றுள்ளார். திருமணத்திற்கு பிறகு பெண்ணிற்கு ஏற்பட்ட மனமாற்றத்தால் 'லிவ் இன்' காதலனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். பின்னர், அவர் ஹனிமூன் கொண்டாட வெளிநாடு சென்று திரும்பி வரும் தகவல் தெரிந்ததையடுத்து விமான நிலையத்திற்கு வந்து பிரச்னையில் ஈடுபட்டுள்ளார்,'' என்றார்.

Advertisement