ஓட்டல்களில் பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள் அலட்சியம்; உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு அவசியம்

மாவட்டத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள், ரோட்டோர கடைகள் என ஏராளமாக உள்ளன. பொதுவாக ஓட்டல்களில் உணவுப் பொருட்களை வாழை இலை, தாமரை இலை போன்ற இயற்கை இலைகளை பயன்படுத்தி மக்களுக்கு பரிமாறுவது, பார்சல் உள்ளிட்ட சேவைகளை செய்ய வேண்டும். வாழை இலைக்கும் சேர்த்து, உணவுப் பொருட்களுக்கு பணம் வாங்குகின்றனர். இதுதான் ஓட்டல்கள், உணவுப் பொருட்களை கொடுக்கும் கடைகளில் உள்ள நடைமுறை வழக்கம். சீசன் நேரங்கள், விசேஷ நாட்களில் வாழை இலைகளுக்கு அதிக கிராக்கி ஏற்படுகிறது.
அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், உரிமையாளர்கள் பெரும்பாலானோர் வாங்க மனமில்லாமல் உணவுகளை பரிமாறும் போது இலை விரிக்காமல் சில்வர் தட்டுகளில் அப்படியே பரிமாறுகின்றனர். பொதுவாக பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் சாப்பிடும் தட்டுகளில் இலை விரித்து பரிமாறுவது என்பது தொன்றுதொட்டு இருக்கக்கூடிய வழக்கம். இன்றைய சூழ்நிலையில் வாழை இலை விரித்து பரிமாறுவது என்பது கட்டாயமான ஒன்று.
அப்படி இருக்கும்போது வாழை இலை விலை உயர்வை மனதில் கொண்டு பெரும்பாலான ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் உள்ளிட்ட உணவு பரிமாற, பார்சல் கட்டிக் கொடுக்கும் இடங்களில் பாலித்தீன் பிளாஸ்டிக் பேப்பர்களில் மடித்து கொடுக்கின்றனர். டீ கடைகளில் டீ, காபி பார்சல் கொடுக்கின்றனர். இதனை அப்படியே சாப்பிடுபவர்களுக்கு தொற்று ஏற்பட்டு உடல் உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் மூலம் பலர் நோய்வாய்ப்படும் ஆபத்து உள்ளது. புற்றுநோய் பாதிக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அப்படி இருக்கும் போது தங்கு தடை இன்றி பெரும்பாலான இடங்களில் பாலித்தீன், பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு பொருட்களை மடித்து கொடுக்கின்றனர். இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதனால் இஷ்டத்திற்கு பேப்பர்களில் பரிமாறுவது அதிகரித்து வருகிறது.
பலர் பாதிக்கப்பட்டு வருவதால் இதனை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாலித்தீன், பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டியது அவசியமாகிறது.