ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடில்லி: திருப்பூரில் சாய ஆலைகளில் வெளியேற்றப்படும் ஜவுளிக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறைக்கு, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றுகிறார். இதன்படி நேற்று ஒலிபரப்பான 120வது அத்தியாயத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
ஒற்றுமை உணர்வு
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநில மக்கள் தங்கள் புத்தாண்டை கொண்டாடினர். இதேபோல், இன்னும் சில நாட்களில் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில மக்களும் தங்கள் புத்தாண்டை கொண்டாட உள்ளனர். ஏப்ரல் முழுதும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
வெவ்வேறு இடங்களில் இப்பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், பாரதத்தின் ஒற்றுமையிலே வேற்றுமை என்பதை காண முடிகிறது. இந்த ஒற்றுமை உணர்வை நாம் மென்மேலும் பலப்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு, தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்க உள்ளது. இந்நாட்களில், புதிய திறன்களை வளர்த்து மாணவர்கள் தங்களை கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள், பயனுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் சமூக அமைப்புகள், அறிவியல் மையங்கள் பற்றிய தகவலை, #MyHolidays என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பகிருங்கள்.
விழிப்புணர்வு
இதேபோல், மாணவர்களின் பெற்றோர், நம் நாட்டில் உள்ள கிராமங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று அங்கு கிடைக்கும் அனுபவங்களையும் #HolidayMemories என்ற ஹேஷ்டேக்கில் பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன். கோடைக்காலங்களில், நீர் சேமிப்பு என்பது முக்கியமானது. மழைநீர் சேகரிப்பை, சமூக இயக்கமாக மாற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில், 1,100 கோடி கன மீட்டர் அளவுக்கு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் நாம் சந்திக்கும் மற்றொரு சவாலான விஷயம், ஜவுளிக்கழிவுகள்.
உலகளவில், அதிக ஜவுளிக்கழிவுகளை உருவாக்கும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. இக்கழிவுகளை, மறுசுழற்சி செய்வதில் நம் நாடு முன்னேறி வருகிறது. தமிழகத்தின் திருப்பூரில் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ஜவுளிக்கழிவுகள், சுத்திகரிப்பு ஆலைகளில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இதன் வாயிலாக, சுத்திகரிக்கப்பட்ட துாய்மையான நீர், அங்குள்ள நொய்யல் ஆற்றில் கலக்கிறது. திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பணிகளும் பாராட்டப்பட வேண்டியவை.
சர்வதேச யோகா தினத்திற்கு, 100க்கும் குறைவான நாட்களே உள்ளன. உங்கள் வாழ்வில், யோகாவை நீங்கள் மேற்கொள்ளவில்லை எனில் உடனே செய்யுங்கள். இன்னும், காலம் கடந்து விடவில்லை. இந்த ஆண்டிற்கான யோகா தின கருப்பொருள், 'ஒரே பூமி; ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. யோகா வாயிலாக, ஒட்டுமொத்த உலகையும், ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
பாரத் டெக்ஸ் -2025 கண்காட்சியில், பிரதமர் மோடியை சந்தித்த போது, திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை குறித்து எடுத்துரைத்தோம். 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப சுத்திகரிப்பு, மறுசுழற்சியுடன் கூடிய மறுபயன்பாடு, 22 லட்சம் மரம் வளர்ப்பு, 2,000 மெகாவாட் அளவுக்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஆகிய சாதனைகளை விளக்கினோம். 'மன் கீ பாத்' நிகழ்ச்சி வாயிலாக, திருப்பூரின் சாதனையை பிரதமர் பாராட்டியது பெருமையாக இருக்கிறது.
- சக்திவேல், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணைத்தலைவர்
திருப்பூரின் மொத்த மின் தேவையை காட்டிலும், இரண்டு மடங்கு அதிகமாக எரிசக்தி தயாரிக்கிறோம். காற்றாலை வாயிலாக, 1,700 மெகாவாட் மற்றும் சூரிய மின்சக்தி பூங்கா வாயிலாக 300 மெகாவாட் என, 2,000 மெகாவாட்' அளவுக்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்கிறோம். பிரதமர் பாராட்டியது, திருப்பூரை ஊக்குவிப்பதாக இருக்கிறது.
- சுப்பிரமணியன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்.
மன் கீ பாத்' நிகழ்ச்சிக்காக, மத்திய அரசு குழுவினர், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையத்தை சில நாட்களுக்கு முன் நேரில் பார்வையிட்டனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகிறோம். பிரதமர் பாராட்டியது, ஆறுதலாக இருக்கிறது.
- காந்திராஜன்திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர்
